Thursday, July 2, 2009

மனோசக்தி பாடம் 2
தியானம்- 1

குண்டலினியோகம் தியானம் எனும் இது தியானங்களில் மிக மிக முக்கியமானது ஆகும். தொப்புள் கொடியிலிருந்தும் முதுகு தண்டில் இருந்தும் பிரம்ம கபாலம் என்று சொல்லக் கூடிய சிரசு உச்சிக்கு தனது முழுச் சக்தியினையும் கொண்டு வருவதாகும். இது ஞானத்தின் திறவுகோல். அப்படி தன்னுடைய சக்தி அனைத்தும் சிரசு தானத்திற்கு கொண்டு வருபவர்கள் முகத்தில் ஞானி ஒளி வீசும். கண்கள் பிரகாசம் அடையும். இத்தகையோருக்கு சமாதி நிலை கிட்டும். இந்நிலையை அடைவோருக்கு சாதி, மதம், பேதம் கிடையாது.

  • குண்டலிமகா யோக தியானம் என்பது தொப்புள் கொடியையும் முதுகு தண்டையும் சிரசையும் வைத்து பெறுவதாகும். இதற்கு குண்டலினி மகாயோக தியானமென்பது. இதுதான் யோகங்களில் மிக சிறந்தது. இந்த யோகத்திற்கு இல்லற உறவிலிருந்து விடுபட்டு இருப்பது நல்லது. அவர்களூக்கு மட்டும் இது சித்திக்கும். இது நல்ல மனதையும் கல்வியையும் சிறந்த அறிவிவையும் - நோயிலிருந்து நிவர்த்தியும் தருவதாகும்.

தியானம்- 2

இரண்டாவது யோகமானது புருவ மத்தியை மையமாக கொண்டு கோடி சூரிய பிரகாசமாக புருவ மத்தியில் தியானித்து ஜீவ ஒளியும் பரிசுத்த ஞானமும் பெறுவார்கள். இதையே E.S.P என்ற ஜீவ சக்தி பெறுவதற்கு உறுதுணையான தியானமாக செய்யலாம். [E.S.P என்பது EXTRA SENSE POWER என்ற அற்புத அதீத சக்தி என்று கூறப்படும்]

தியானம்-3

மூன்றாவது தியானமாவது இதயக்கமலத்தின் மத்திய ஆத்ம ஒளி பெறுவதற்கு தியானித்து நற்சிந்தை, நல்வாழ்க்கை, நல்வாக்கு பெறக்கூடியவர்களுக்கும் ஜீவ விடுதலை பெற்று ஜீவ முக்தி பெறுவதற்கு உரியதாகும்.

மற்ற மூன்று தியான முறையும் தன்னுடைய குருவைக் கொண்டு ஒன்றும் சூரியனை மட்டும் தியானித்து, ஒரு குறிப்பிட்ட மையப்புள்ளியை மையமாக வைத்து அதிலேயே தன் எண்ணங்களைக் குறித்து இரு கண்களையும் வைத்து அதிலேயே தன் எண்ணங்களைக் குறித்து இரு கண்களையும் ஒரே சமஅளவில் செலுத்தி தியானித்து வருபவர்களுக்கு ஹிப்னாடிசம் ( மனோவசியம்) கைக்கூடும்.

மனதுக்கு நிம்மதியை வேண்டுகிறவர்கள் தியானத்தின் மூலமாக அந்த நிம்மதியை அடைய முடியும். உடலில் ஏற்படுகிற நோய்களையும் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். தியான முறை என்பது தான் இணையவிருக்கும் இறைவனை அடைவதற்கு சரியான முறையாகும். நீங்கள் ஒருநாள் முழுதும் மவுனமாக இருந்து பாருங்கள். அன்று உங்கள் உள்ளம் முழுதும் சனமற்று இருப்பதை உணர்வீர்கள். இதைப்போல் நீங்கள் தியானம் ஆரம்பிக்கப்பட்டு 9 நாளில் தியானத்தின் உண்மையையும் பூரணத் தத்துவதையும் உடலில் உள்ள நோய்களிருந்தும் படிபடியாக விடுபட்டு புத்துணர்வு பெறுவதையும் 4443 நரம்பு நாடிகளும் புதுமைப் பெற்று ஒரு பூரண உற்சாகம், ஆரோக்கியம் பெறுவதை நீங்கள் உணர்வீர்கள்.

தியானம்-4

நான்காவது தியானம் என்பது சர்வமும் ஏகாந்தம். நீக்கமற எங்கும் நிறைந்த இறைசக்தியை உணர்வது, அறிவது, தெரிவது, தெளிவது. இது புத்தியை ஆதாரமாக கொண்டு சிந்திப்பது. பிறப்பு, மூப்பு, இறப்பு, வாழ்வு என்ற நால்வகை தத்துவங்களில் தம்மனதை நிலை நிறுத்தி சிந்தித்து சிந்தித்து இடைவிடாது சிந்தனையின் பலனாய் பர ஒளியை அடைவதாகும், தீர்க்க தரிசனம் பெறுவதாகும். தன்னுள் மறைந்து கிடக்கும் அறிவு ஒளியை இவ்வுலக இயக்க நுண்கதிர்களுடன் சூரியனிலிருந்து வரும் ஏழுவிதமான வர்ண ஒளி அலைகளுடன் இணைத்து ஏகாந்த சித்தி பெற பயன் பெறுவதாகும்.

இதற்கும் இறை வழிபாட்டிற்கும் தொடர்பு இல்லை. நல்ல கொள்கைகளை கடைப் பிடித்து அன்பு இரக்கம் மேலான நற்சிந்தை கொள்வதாகும். ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு தன்னலம் கருதாத சேவையின் மூலம் இறைநிலை அடைவதாகும். இதன்படி செய்யும் தியானம் மானசீகம் வசீகரம் சர்வ வல்லமை ஆசையின்மை இவ்வுலக இன்பங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கு மட்டும் சித்தியாகும். இத்தகைய தியானம் சித்தியை உடையவர்களை எல்லா உயிர்களும் தொழும். உயிர் கொல்லாமை ஆத்மா ஒன்றே என்ற மனப்பக்குவம் பெறுதல்,மேலான குணங்களை இந்த புத்திமார்க்க தியானம் மிகச் சிறந்ததாகும். தியானத்தின் மூலம் தான் கண்ட அறிவு ஒளியை ஆத்மசக்தியால் கிடைத்த உண்மையின் தத்துவங்களை மக்களுக்கு போதிப்பதாகும். இதற்கு சாதி, மத பேதம் கிடையாது.

தியானம்-5

இதற்கு பஞ்சம் யோகம் என்று பெயர். இது ஏகாந்தமாக இருப்பதற்கும் முழு துறவியாக இருப்பதற்கும் ஏற்றதாகும். இது முற்றிலும் துறந்த நிலையாகும்.சர்வமும் இறைவன் மயம் என்னும் சர்ணாகதி நிலை. நமக்கு மேலே இறைவன், அவன் நாலும் அறிந்த ஒருவன். நிற்பதும் நடப்பதும் - உண்பதும் உறங்குவதும் இறைவன் செயல் என்று நினைப்பவர்கள்.

தியானம்-6

இதற்கு சர்வாங்க யோகம் என்று பெயர். இது நோயிலிருந்து விடுபடுவதற்கும் உடலையும் மனதையும் கட்டுபாடாக வைத்துக் கொள்வதற்கும் இருதயத்தின் மத்திய பாகத்தை வைத்து ஆத்மஜோதியை உணர்ந்து அறிந்து கொள்வது இந்த தியானமாகும். இது குரு மூலம் தியானித்து சித்தி பெறுவதாகும். அட்டமா சித்திகளை தரும் கட்டுப்பாடற்று திரியும் மனதை ஒரு நிலைப்படுத்தி எண்ண அலைகளை அடக்குவது. மனம் பரிசுத்தம் நிறைந்தது. அதில் ஒரு சிறுபுள்ளி விழுந்தாலும் எண்ண அலைகளை அது மாற்றிவிடும்.

கண்ணாடி புகைபடியாது தூய்மையாக இருந்தால் அதில் தெளிவான உருவத்தினை காண இயலும். அது தூய்மையற்றதாக இருந்தால் உருவம் தெரிவாகத் தெரியாது. சிறிது நேரம் கண்ணை மூடி அமைதியாக இருங்கள். இயற்கை ஒடுங்குதலை உணவீர்கள். நீங்கள் யார் என்பதை உணர ஆரம்பிப்பீர்கள். பேரானந்தத்தின் வாசல் கதவின் திறவுகோல்தான் தியானம். மற்ற ஏனைய வழிபாடுகளைக் காட்டிலும் தியானத்துடன் ஒப்பிடக்கூடிய வழிபாடு எதுவும் இல்லை. ஆனந்தம், ஆன்மீக உணர்வு உங்கள் ஆன்மாவில் உள்ளது. உங்களுக்குள் மறைந்து கிடக்கும் பேரானந்தத்தை சதா சிந்தித்தும் தியானித்தும் அறிந்துக் கொள்வதே தியானமாகும்.

உங்களால் முடியாது என்பது எதுவுமில்லை. எதையும் முடியாது என்று ஒதுக்கி, தள்ளி விடாதீர்கள். நியூட்டன் புவியீர்ப்பு சக்தியை கண்டுபிடிக்கும் போது எண்ணம் முழுக்க அதிலேயே செலுத்தியதால்தான் கண்டுபிடிக்க முடிந்தது. அப்படியேதான் எல்லா விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் கண்டு பிடிக்கும் போதும் இருந்திருக்கும் என்பது உண்மை. அது போல உங்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் தியானத்தின் மூலம் ஒரு நிலைப்படும் போது உங்களுக்குள் ஒளியினை காணமுடியும். உங்கள் வல்லமை வெளியுலகில் இல்லை. அது உங்களுக்குள்ளேயே புதைந்து கொண்டு இருக்கிறது. ஒருவனின் சிந்தனை அவனின் கண்டுபிடிப்பில் அவனை வெளிக்காட்டிக் கொண்டு இருக்கிறது. இடைவிடாது உங்களது இலட்சியத்தைக் குறித்து போராடுங்கள். வெற்றி நிச்சயம்.

அச்சமற்ற வாழ்வதற்கு பழகிக் கொள்ள உதவுவதுதான் தியானத்தின் சக்தியாகும். சக்தி, சித்து, பரவொளி ஆகிய அனைத்தும் உடையவர்கள் நீங்கள். தியானப் பயிற்சியில் கிடைக்கும் வெற்றியும், அந்த வெற்றியின் பின்னே நமக்கு இன்பம் தருவதாகவும், சகல விஷயங்களையும் புரிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமைகிறது. நுண்ணிய விஷயத்தினையும் தன் இதயத்தின் மூலமே தெளிவு படுத்திக்கொள்ள தியானத்தின் மூலம் கிடைக்கும் ஒருமுகப்பாடு துணை செய்கிறது. இன்பமும் பெருகுகிறது.

மனம் நிலைபெற, இன்பம் பெற - தினமும் பத்து நிமிட மணித்துளிகளை ஒதுக்குங்கள்.


2 comments:

இராஜராஜேஸ்வரி said...

இடைவிடாது உங்களது இலட்சியத்தைக் குறித்து போராடுங்கள். வெற்றி நிச்சயம்.//
எழுமின் -விழிமின் -ஓயாது உழைமின் -என்பது விவேகானந்தரின் சத்திய வாக்கல்லவா?

KUMAR said...

http://www.tamilhindu.net IDU INGARUNDU SUTTADHA

Post a Comment