Sunday, March 10, 2013

மனோசக்தி பாடம் 18



நம் உண்மையான வழிகாட்டியான ஆழ்மனதை (sub-conscious) எளிய சுயமனோவசிய பயிற்சிக்குப் பழக்கி நாம் விரும்பும் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வரலாம். தியானத்தின் போது இருக்கும் மனநிலைதான் ஆழ்மன சுயமனோவசியப் பயிற்சியின் மனநிலையும்.

இதோ பயிற்சிக்கான எளிய வழிகள்:

• முதலில் ஒரு அமைதியான இடத்தில் சற்று வசதியாக அமர்ந்து கொள்ளவும்.

• பிறகு கண்களை மூடி, மூச்சை நன்றாக உள் இழுத்து, சில வினாடிகள் வைத்திருந்து, பின் வெளியே விடவும். இதே போன்று மூன்று முறை செய்யவும்.

• பிறகு, தலையிலிருந்து பாதம் வரை மெதுவாக கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் ஒவ்வொரு தசையும் ஓய்வாக உணரும்படியாக, 'ரிலாக்ஸ்' என்ற ரம்மியமான கட்டளையுடன், உச்சந்தலையில் ஆரம்பித்து முன் மண்டை, முகம், கழுத்து என அடி வரை அவசரமில்லாமல் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும். நமது உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ரிலாக்ஸ் ஆவதை கண்களுக்குள் காட்சியாகவும் உருவகம் செய்யலாம்.

• பயிற்சியின்போது வெளியிலிருந்து எண்ண அலைகள் தாக்காமல் இருக்க, நம்மைச் சுற்றி ஒரு வெள்ளை ஒளி சூழ்ந்து பாதுகாப்பதாக கற்பனை செய்து கொள்ளவும்.

• உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ஓய்வாக உணர்ந்து, ஒரு பாதுகாப்பு கவசத்தையும் உருவாக்கிய பிறகு, பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே மேலிருந்து கீழ் நோக்கி, மாடிப்படி வழியாகவோ அல்லது எலிவேட்டர் (Elevator) மூலமாகவோ இறங்குவதாக கற்பனை செய்யவும். ஒவ்வொரு எண்ணை எண்ணும்போதும் இன்னும் ஆழமாக, இன்னும் ஆழமாக என்று கூறிக்கொண்டே இறங்கவும். (கவனம் சிறிது பிசகுவது போல உணர்ந்தால், பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே இறங்குவதை இரண்டு முறை செய்யலாம்.)

• இப்பொழுது நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மிக அழகான, மிக இனிமையான ஒரு இடத்திற்கு வந்து விட்டதை உணருங்கள். அந்த இடம் உங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்த இடமாகவோ அல்லது உங்கள் விடுமுறை நாட்களில் செல்லும் இடமாகவோ அல்லது ஒரு கற்பனை இடமாகவோ கூட இருக்கலாம். மெதுவாக உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் பாருங்கள். மிருதுவாக அவற்றை தொட்டுப் பாருங்கள். சுற்றிக் கேட்கும் இனிமையான ஒலி, ஒருவிதமான நறுமணம் ஆகியவற்றை உணருங்கள். இந்த அனுபவம் மனக் கண் முன் தெளிவான உயிரோட்டமுள்ள காட்சியாகட்டும்.

• இப்பொழுது, உங்கள் குறிக்கோளைக் கற்பனை செய்யத் தொடங்கலாம். அந்தக் குறிக்கோள் கற்பனையில் காட்சியாகவோ, செயலாகவோ அல்லது வார்த்தை வடிவாகவோ இருக்கலாம். குறிக்கோள் கற்பனை பலமுறை செய்யவும்.

• பிறகு, அந்த குறிக்கோள் முழுமை அடைவதை பல நிலைகளாக்கி, ஒவ்வொரு நிலைக்கும் சென்று, அந்த ஒவ்வொரு நிலை வெற்றி தரும் அனைத்து உணர்வுகளையும், அமைதியாக முழுமையாக அனுபவிக்கவும்.

• இதில் மிக முக்கியமானது, பயிற்சி பலன் கொடுக்க, நாம் உபயோகிக்கும் அனைத்து வார்த்தைகளும் நேர்மறையானவையாக இருக்க வேண்டும்.

• பயிற்சி முடிந்தவுடன், ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக் கொண்டே, 'மிக உற்சாகமாக, சந்தோசமாக இருக்கிறேன்' என்று கூறிக் கொண்டே கண்களை மெதுவாகத் திறக்கவும்.

நம்மில் பலருக்கு அலாரம் அடிக்கும் முன்னே அல்லது அடித்து முடிக்கும் முன் எழும் பழக்கம் இருக்கக்கூடும். அதேபோல் பயிற்சி ஆரம்பிக்கும்போது நம் மனத்திற்குள் குறிப்பிட்ட நிமிடப் பயிற்சி என்று சொல்லி விட்டால் போதும். நம் உடலில் உள்ள பயோகிளாக் (bio-clock) அதை தானே செட் செய்து கொள்ளும். அந்த நேரம் முடிந்ததும் தானாகவே பயிற்சியிலிருந்து நீங்கள் வெளியேறுவதை உணர்வீர்கள்.

பயிற்சியில் பதிவு செய்ய சில எடுத்துக்காட்டுகள்:

• நான் எப்பொழுதும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் இருப்பேன்.
• இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
• என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி சரியான முறையில் வேலை செய்து என்னை ஆரோக்கியமாக வைக்கும்.
• நான் என்னைச் சுற்றியுள்ள அனைவரிடம் அன்பாக நடந்து கொள்வேன்.
• எனக்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் பிடிக்கும்.
• நான் என் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவேன்.

பதிவு செய்யும் தகவல்களை விருப்பம்போல் அமைத்துக் கொள்ளலாம். அதே போல், ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு விஷயம் என ஆரம்பித்து, பின் நாட்களைக் குறைத்தோ அல்லது கூட்டியோ கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சி தனியான அமைதியான இடத்தில் செய்ய ஆரம்பித்து, பின் இதை நாம் பயணம் செய்யும்போது கிடைக்கும் நேரத்திலோ, வேலையின் இடையில் கிடைக்கும் சில நிமிடங்களிலோ கூட செய்யலாம். சில நிமிடங்கள் கண்ணை மூடிச் செய்யும் பயிற்சி பொதுவாக மற்றவர்கள் பார்வையிலும் கவனிப்புக்குரியதாகாது.

சம தரையில் படுத்துக் கொண்டு, கண்களை மூடி உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் கவனம் செலுத்துதல் மற்றும் அதை அன்பாக நேசிப்பதாக உணர்வது என்பது போன்ற சுயமனோவசிய பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருப்பதால் பல யோகா மையங்களில் இப்பொழுது இது பயிற்றுவிக்கப்படுகிறது. 

Saturday, March 9, 2013

மனோசக்தி பாடம் 17

தவத்தால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள்

தவ நிலையில் நம் மனம் ஆழ் நிலைக்கு செல்லும். பொதுவாக  நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம் மனம்  வெளி மனம் (conscious mind), உள்மனம்  (subconscious mind) என இரண்டு நிலைகளில் இயங்கும். நாம் நம் மூளையில் ஏற்படும் எண்ணங்களின் விளைவாக செய்யும் செயல் வெளி மனம் எனப்படும். அதேபோல் நாம் செய்யும் எண்ணம் இல்லாமல் செயல்படும் சில நம் உடலின் வேலைகள் உள் மனதின் உதவியோடு நடைபெறும். உதாரணமாக நம்முடைய இதயத் துடிப்பு, நம்முடைய மூச்சு, இப்படி சில செயல்கள் நம் விருப்பங்கள் எண்ணங்கள் இல்லாமல் தானாக நடக்கும் அவை செய்வது உள் மனம். 
தவ நிலையில் இந்த இரண்டு மனநிலையை தாண்டி நாம்  ஆள் மனதிற்கு(Transcendental mind) செல்ல முடியும். தவ நிலையில் நம் மனம் ஆழ் நிலைக்கு செல்லும். இதனால் நம் மனம் அமைதி அடைவதுடன் நாளடைவில் ஆழ்ந்த சிந்தனை, தெளிவான சிந்தனை  மற்றும் ஆக்கபூர்வ சிந்தனை மேலோங்கும். தீர்மானிக்கும் திறன் கூடும். மனம் தீட்டா அதிர்வெண்ணில் இருக்கும் பொழுது மனம் பல அறிவதற்கரிய விடயங்களை அறியும். இந்த மன நிலையில் தான் புதிய கண்டுபிடிப்புகளும், ஒப்பற்ற கலை படைப்புகளும் உருவாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.