Thursday, November 29, 2012


இராஜ யோகம் செய்யும் முறை
அட யோகம் செய்தவர்கள் சுலபமாக இராஜ யோகம் செய்யலாம். எப்போதும் உடல் அசையாமல் இருந்து இந்த யோகம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். சூரியன் போன்ற மனதிற்கு வாயுதான் நாதன். வாயுவிற்கு லயமே நாதன். இந்த வாயுவை ஜெயித்து சர்வசங்கல்பமும் விட்டு இருந்தவன் காலத்தை வென்றவானாகிறான்.

கேசரி, சாம்பவி முத்திரையில் இருந்து யோகியானவன் உள்ளே திருஷ்டியையும் புறத்திலே நினைவுமாக நாதத்தில் லயித்து இருக்க வேண்டும். இந்த சாம்பவி முத்திரையில் சூன்யமாய் இருக்க வேண்டும். இந்த சாம்பவி முத்திரையில் சூன்யமாய் நின்றாலும், சூன்யமில்லாமல் நின்றாலும்  2 திருஷ்டிகள் உண்டு.

 அதில் ஒரு திருஷ்டி மத்தியில் மேல் நோக்கி பார்க்கும் போது நட்சத்திரங்கள் போலவும், ஜோதி போலவும் பிரகாசித்து நிற்கும். அப்படியே பார்க்கின்ற திருஷ்டியை உள்ளே பார்த்தால் அது உள்மணிக்கு காரணமாகிறது. இந்த திருஷ்டியானது நினைவு வைத்த இடத்தில் நிற்கும். அதில் அப்படியே லயித்து இருந்தால் சந்திராமிர்தம் [சகஸ்ராரத்திலிருந்து] சுரக்கும். அதை ஜீவன்பானம் செய்யும்.

இன்னெரு விதத்தில், முக்தாசனத்தில் இருந்து கேசரி முத்திரை அல்லது சாம்பவி முத்திரையிலிருந்து கொண்டே சுவாச ஓட்டத்தை விட்டு மூலத்தில் மனதை வைத்து நாதத்தை மனதில் கேட்டு புற சலனங்களை ஒடுக்கி நாதமாகிய பாவனா சமுத்திரத்தில் அமிர்தபானஞ்செய்து கொண்டு சிதாகாசத்தில் லயித்து இருத்தல் ஆகும்.
இப்படி இருப்பதை உள்மணி அவஸ்தை என்று சொல்வார்கள். அப்போது கிரந்திகள் உடையும்.பிரம்ம கிரந்தி உடைந்தால் நல்ல நாத ஓசை, மணி ஓசை போல் கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த தொனியை கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த தொனியை கேட்டுக் கொண்டே இருந்தால் தேகம் ஒளிமயமாகி ஆனந்த நிலையும் உண்டாகும். இது யோகமார்கத்தின் சித்தியாகும்.

விஷ்ணு கிரந்தியில் வாயுவை ஏற்றி அதுவே நினைவாக இருந்தால் தேவதைகளுக்கு சமமான நிலையை அடையலாம். அப்படி ஏற்றினால் விஷ்ணு கிரந்தி உடையும். ருத்திர கிரந்தி உடைகிற காலத்தில் சரீரம் அறியாமல் உணர்வு நிற்கும். மத்தள நாதம் பிறக்கும். இதனால் சகல தோஷங்களும் நீங்கி நரை, திரை, மரணம் மூப்பு, பசி, தாகம், நித்திரை இல்லாத நிலை உண்டாகும். இந்த நிலையை அடைந்த யோகிகள் காய சித்தி அடைந்து ஜீவன் முக்தர்களாக எப்போது வேண்டும் வரையிலும் ஜீவித்திருப்பார்கள்.

அஷ்டமா சித்திகளையும் பெறுவர். நினைத்தது எல்லாம் சித்தியாகும்.நமது பரமபதமான சரீரத்திற்கு நடுவே இருக்கிற குண்டலினி சக்தியானது நடுவே பிரகாரமாய் வளைந்து இருக்கும். இவ்வாறு நித்திரையிலிருக்கும் குண்டலினியின் நித்திரையை எழுப்பியவனே பரமயோகி ஆவர். சுழுமுனை என்கிற குண்டலினியாகிய சாம்பவி சக்தி 72,000 கொடிகளாலே பின்னப்பட்டது.

இந்த தேகமாகிய கூடு சுழுமுனைமார்கத்தில் குண்டலினி வற்றினால் மனோன்மணியாகிய சக்தி தரிசனம் கிடைக்கும்.யோக முத்திரையிலிருந்த யோகி, சக்தி மத்தியிலே மனதை வைத்து மனதின் மத்தியிலே சக்தியை வைத்திருக்கும் இடமே நிர்வாணம், கைலாசம், பரமபதம், முக்தி என்பதாகும். ஆகாசத்தில் நடுவே மனதை வைத்து மனதின் நடுவே ஆகாசத்தை வைத்தால் அந்த ஆத்மா ஆகாசமயமாக இருக்கும்.

ஒன்றையும் நினைக்காமல் அதையே தியானிக்கவும். அப்போது பிரணவ தேகம் ஆகும். எப்போதும் சிந்தனையை உள்முகமாக வைக்க வேண்டும். அப்போது சகலமும் சித்தியாகும்.

இராஜ யோகம் செய்வதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எண்படிகள் இருக்கின்றன

.இயமம்: அஹிம்சை அல்லது உயிர்வதை செய்யாதிருத்தல் ஆகும். பொய் களவு செய்யாதிருத்தல். எப்போதும் மனம் சுத்தமாயும் நல்லதையே நினைத்தும் செய்தும் இருத்தல்.

நியமம்: தேக சுத்தியுடனும், மன சந்தோஷத்துடனும் முறைபடி யோகம், தியானம் செய்ய அமைதியாயிருத்தல். ஆத்ம ஞானம் அடைய அணுசாரனையாக கிரமப்படி எல்லாமே செய்தல் ஆகும்.

ஆசனம்: முக்கிய ஆசனங்கள் 16 ஆகும்

.பிரணாயாமம் என்பது வாயுவை கட்டுப்படுத்துதல் ஆகும். இதன் விதிகள் மித போசனம் செய்தல், நித்திரை அதிகம் செய்யாதிருத்தல், சோம்பல் இன்றி, ஆசாபாசங்களை விட்டு இருத்தல் ஆகும்.

பிரத்யாகாரம் என்பது மனதை அடக்குதல் ஆகும். ஐம்புலன்களை கட்டுப்படுத்துதல் ஆகும்.

தாரணை என்பது மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகும். ஓரு வஸ்துவில் சிந்தனையை நிறுத்தி அதிலேயே லயித்து இருப்பதாகும்.

தியானம் என்பது மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி புருவமத்தி அல்லது நாசிநுனியில் நாட்டம் வைத்து அதில் லயித்திருப்பதாகும்.

சமாதி என்பது தியானத்தின் முடிவு ஆகும். மனதை கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்திய நிலையில் அதில் லயித்து ஜோதியைக் கண்டு அதிலேயே மூழ்கி புறசலனஙகளில்லாமல் இருத்தல், சுவாசத்தை ஆக்ஞாவில் நிறுத்தி அதில் நாட்டத்தை வைத்து அதில் தரிசித்து இருத்தல் ஆகும்.

 

1 comment:

sellvaraj.blogspot.com said...

அண்ணா,

"பயிர்களுக்கு உரம் எவ்வளவு தேவையோ அதேபோல் தான் உங்கள் பதிவு" எங்களுக்கு அதை இடைவிடாமல் செய்யும் உங்களுக்கு என் நன்றிகள்!

Post a Comment