Saturday, January 14, 2012

மனோசக்தி பாடம் 12

தியானம் செய்வது எப்படி?
“தியானம் செய்ய உட்கார்ந்து விட்டு, ‘என்ன... எனக்கு இன்னும் தியானம் வரவில்லை..? தியானம் எப்படி இருக்கும்?‘ என்று தொடர்ந்து மனம் எண்ணிக் கொண்டிருந்தால் தியானம் வராது.

தியானம் செய்ய அமரும்போதே, ‘நான் அடுத்த 10 அல்லது 20 நிமிடங்களுக்கு எதைப் பற்றியும் எண்ண மாட்டேன்‘ என்று மனதில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தியானம் செய்ய அமர்ந்தவுடன் மனம் ஏகப்பட்ட எண்ணங்களை அவிழ்த்துவிடும். அப்போது ‘நாம் தியானத்தில் இருக்கிறோம்‘ என்ற உணர்வுடன், அந்த எண்ணங்களுடன் கலந்து நம்மை மறந்து பின் செல்லாமல், அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும்.

 இதற்குதான் நமது விழிப்புணர்வு உதவுகிறது. விழிப்புணர்வின் ஆற்றல் அதிகமாக உள்ளவர்களுக்கு எண்ணங்களை அவற்றுடன் ஒட்டாமல் விலகி நின்று பார்ப்பது எளிதாகிறது. அப்படி பார்க்க, பார்க்க... எண்ணங்கள் மெதுவாக தங்கள் வலுவை இழக்கின்றன. எண்ணங்கள் மெதுவாக அடங்குகின்றன. அப்படி எண்ணங்கள் அற்ற நிலையில் தான் தியானத் தன்மை உண்டாகிறது” என்கிறார் மகரிஷி.

ஆனால், நம்மில் பலருக்கு தியானம் செய்யவே நேரமில்லை. பணம்... பணம்... பணம் மாத்திரமே என்றாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், மனித சமுதாயம் அந்த பணத்தை தேடித்தான் பயணிக்கிறது. அதனால்தான், காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும்வரை டென்ஷன்... டென்ஷன்... என்று தவிக்கிறார்கள். அப்படி, வாழ்க்கையே டென்ஷனாகி, மன அமைதிக்கான வழி தெரியாதவர்கள் எங்கே அமைதி என்று கோவில் கோவிலாக அழைகிறார்கள்.
அங்கேயும் அமைதி கிடைக்கவில்லை என்றால், தியானம் செய்தால் அமைதி வந்துவிடும் என்று சொல்கிறார்களே... என்று கேட்டு, தியானம் கற்றுக்கொடுக்கும் இடங்களை நோக்கி படையெடுக்கிறார்கள்.

அதன்விளைவு... பணம் கொடுதத்து தியானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், உங்களுக்கு அந்த கவலை தேவையில்லை. மனதை ஒருமுகப்படுத்தினாலே தியானத்தை எளிதில் கற்றுக் கொள்ள லாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் மிகவும் அமைதியான இடத்தை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு பிடித்தமான - மன அமைதியைத் தரக்கூடிய இடமாக அது இருக்க வேண்டும். பூஜையறையாகக்கூட இருக்கலாம்.

2. நீங்கள் அணிந்திருக்கும் ஆடையும் தியானத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. அணிந்திருக்கும் ஆடையானது மிகவும் இறுக்கமானதாக - குறிப்பாக ஜீன்ஸ் பேண்ட் - இருக்கக்கூடாது. சற்று தளர்வான ஆடையே இதற்கு பொருந்தும்.

3. தியானம் செய்வதற்கு ஏற்ற நேரத்தை தேர்வு செய்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரம் காலைப் பொழுதாகவோ அல்லது மாலை நேரமாகவோ இருப்பது மிகவும் நல்லது. அந்த நேரங்களில் மனதை ஒருமுகப்படுத்துவது எளிது.

4. அடுத்ததாக தியானம் செய்ய தேர்வு செய்த இடத்தில் அமர்ந்து விடுங்கள். தரையில் மென்மையான துணி விரிப்பை விரித்து, அதன்மீது அமருங்கள். மார்பை நிமிர்த்துக் கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு சவுகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

5. தொடர்ந்து, கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் இரு புருவங்களுக்கு மத்தியில் உங்களது இஷ்ட உருவத்தை நிறுத்துங்கள். அந்த உருவத்தையே உங்கள் மனக் கண்களால் உற்றுப்பாருங்கள். அந்த உருவத்தின் மீது மட்டும்தான் உங்கள் கவனம் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தெரிந்தாலும், போகப்போக சரியாகிவிடும் என்பதால் பதற்றப்படாமல் இருங்கள். நேரம் செல்ல செல்ல அந்த உருவத்திற்குள்ளேயே தொலைந்து போங்கள். அதாவது, அந்த உருவத்திற்குள் நீங்கள் கலந்துவிட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அருகில் என்ன நடக்கிறது என்பதை கேட்கவோ, கவனிக்கவோ இடம் தர வேண்டாம்.

6. இப்போது நீங்கள் அந்த உருவத்திற்குள் தொலைந்து போய்விட்டீர்கள், அதாவது ஒன்றிப்போய்விட்டீர்கள். அப்போது, உங்களை அறியாமலேயே ஒரு பரவச நிலை ஏற்படும். மகான்கள் இதை சமாதி நிலை என்கிறார்கள். உதாரணம் : இரவில் உறங்கும்போது நம் மனம் எங்கேயெல்லாமோ சென்றுவிட்டு வருகிறதே, அதுபோன்ற உணர்வு நிலை இது. உங்கள் உடல் முழுவதும் ஆனந்த வெள்ளம் - பரவசம் பரவி ஓடும். எங்கோ பறப்பதுபோல் உணர்வீர்கள்.

7. உங்கள் மனம் அந்த பரவத்திலேயே தொடர்ந்து லயித்துப்போனால், நீங்கள் தியானம் செய்யும் அளவு அதிகமாகும். ஒரு மணி நேரத்தை கடந்தும்கூட தியானம் செய்து கொண்டிருப்பீர்கள். நேரம் சென்றதே உங்களுக்குத் தெரியாது.

8. குறிப்பிட்ட கால அளவுக்குள் உங்கள் தியானத்தை நிறைவு செய்யுங்கள். இப்போதும் உங்களுக்குள் அந்த பரவச உணர்வு இருப்பதை உணர்வீர்கள். சுறுசுறுப்பு அதிகமாக காணப்படும். புன்னகை உங்கள் முகத்தில் தவழும்.

9. அப்புறம் என்ன...? நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியில் முடியும்.

10. தியானத்தை ஒருவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் அவருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. எதையும் எதிர்கொள்ளும் திறன் வளர்கிறது. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுகிறது. இவை எல்லாம் கிடைத்துவிட்டால், வெற்றி மீது வெற்றி வந்து குவியத்தானே செய்யும்?

1 comment:

Never give up said...

Yen Sir, dhideernu oru article kooda kaanum,....please keep writing good things

Post a Comment