Saturday, May 15, 2010

தன்னம்பிக்கை


தன்னம்பிக்கை வார்த்தைகள்


இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால்போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பான வாழ்க்கையாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக்காமல் திரும்பமாட்டேன் என்ற உங்களது உறுதிஒன்றே எப்பொழுதும் கைவிளக்காக இருக்க வேண்டும். "வெற்றிபெறவேண்டும்" என்னும் உங்களுடைய திடமான எண்ணம்தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான் தோற்றுவிடுவேனோ? என்று சிந்திக்காதிர்கள். நான் வெல்வேன் என்று நம்புங்கள். அப்போதுதான் பிரச்சினைகளை வெல்ல வழிபிறக்கும். வீட்டிலும், வேலையிலும், வெளியிலும் நான் வெற்றிபெறுவேன் என்கிற மனநிலையே உங்களை வெற்றிபெறச் செய்துவிடும். எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காதிர்கள்.செயலோடும் தொடங்குங்கள்.

சிந்தனை செய்யுங்கள்; முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கையுடனேயே உங்களுடைய சிந்தனை அமைந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல் சிந்தித்தைச் செயலில் காட்ட மிகுந்த மகிழ்ச்சியுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.

தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.அனைத்தையும் வெல்ல முடியும்.வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன் செயல்படுங்கள். தோல்வி, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே சிந்தித்து உயர்வடையுங்கள். உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள்.

வெற்றியைக் கற்பனையில் நம்பிக்கையுடன் பார்க்கும் திறன்,என்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என்றாலும் பொறுமையுடன் விடாப்பிடியாக முயற்சி செய்யும் குணம், இந்த நான்கும் உள்ளவரே தன்னம்பிக்கையுள்ள மனிதர்.

நம்முடைய வெற்றி,தோல்வியைத் தீர்மானிப்பது மனவளர்ச்சியோ, மனவளர்ச்சி இன்மையோ அல்ல.நல்லதே நடக்கும் என்ற மனோபாவம்தான்.எனவே எப்போதும் உண்மையான ஆர்வத்துடன் வெற்றிக்காக உழையுங்கள். நம்முடைய உழைக்கும் நேரம் நாள்தோறும் அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நமது சிந்தனை,செயல்வேகம் ஆகியவை இருக்க வேண்டும். முயற்சியை எவனொருவன் எப்பொழுது கைவிடுகிறானோ அப்பொழுதே அவனது சக்தி முழுவதும் அவனிடமிருந்து பறந்து போய்விடுகிறது.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல.விடாமுயற்சியினால் தான்.வெற்றியின் இரகசியம் "கடின உழைப்பு" என்ற சொற்களில் தான் அடங்கி இருக்கிறது. நம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம்.
சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும் தரும். எப்போதும் சிந்தித்துக் கொண்டே மட்டும் இருக்காமல் செயல்பட்டுக் கொண்டெ இருங்கள்.

நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றால் பலரை உங்கள் பக்கம் ஈர்த்து விடுவீர்கள். நேர்மை உள்ளம் கொண்டவர் என்றால் உங்களை எல்லோரும் நம்புவார்கள். விடாது முயற்சி செய்யும் அரிய குணத்தைப் பெற்றிருந்தால், எப்போதும் நீங்கள் வெற்றி வீரனாகத் திகழ்வீர்கள்.
மனம் அமைதியாக இருக்கவேண்டுமானால் எதிர்மறையான சிந்தனைகளையும், பிறரது திறமைகளை சிறுமைபடுத்துவதையும், கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பதையும் நிறுத்துங்கள். உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். ஊக்கமான சிந்தனைகளையே நிரப்புங்கள். எதிலேயும் நல்லதே நடக்கும் என்றே செயல்படுங்கள். இப்போது நீங்கள் தான் உலகிலேயே மிகவும் அமைதியான மனம் உடையவர்.

2 comments:

அன்புடன் அருணா said...

பூங்கொத்தது!

MOHAMED SALEEM said...

மிகவும் நன்றி!!!

Post a Comment