Friday, April 23, 2010

ஆல்ஃபா


ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை “ரிலாக்ஸ்” (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம். சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

No comments:

Post a Comment