Saturday, April 24, 2010

மனச்சோர்வு இல்லாத வாழ்வுக்கு...


மனச்சோர்வு இல்லாத வாழ்வுக்கு...


இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் ஒவ்வொரு வினாடித் துளிகளும் நமக்கென்றே பரிசளிக்கப்பட்ட மிக அழகான தருணங்கள். ஒவ்வொரு தருணத்திலும் பல்வேறு அனுபவங்கள், அதற்குள் பொதிக்கப்பட்ட சின்ன சின்னச் சந்தோஷங்கள் என வியாபித்திருக்கின்றன. அவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரமும் நம் கையில் இருக்கிறது.

ஆனால், நாமோ நம்முடைய அன்றாடத் தேவைகளுக்காக ஓட ஆரம்பித்து, நமது எதிர்காலம், நமது வருங்கால சந்ததியினரின் தேவைகள் என ஓடிக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது. சிலர் குறித்த இலக்கை அடைகின்றார்கள். சிலர் அடைவதில்லை. பலருக்கு அடைந்தும் திருப்தியில்லை. உண்மையில் வெற்றியோ மன அமைதியோ, எதனையும் அடையக் கூடிய சக்தி நம்முள்ளேதான் உள்ளது.

நம் உண்மையான வழிகாட்டியான ஆழ்மனதை எளிய சுயமனோவசிய பயிற்சிக்குப் பழக்கி நாம் விரும்பும் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வரலாம். தியானத்தின் போது இருக்கும் மனநிலை தான் ஆழ்மன சுயமனோவசியப் பயிற்சியின் மனநிலையும்.

பயிற்சிக்கான எளிய வழிகள்:
* முதலில் ஒரு அமைதியான இடத்தில் சற்று வசதியாக அமர்ந்துகொள்ளவும்.

* பிறகு கண்களை மூடி, மூச்சை நன்றாக உள் இழுத்து சில வினாடிகள் வைத்திருந்து, பின் வெளியே விடவும், இதே போன்று மூன்று முறை செய்யவும்.

* பிறகு, தலையிலிருந்து பாதம் வரை மெதுவாக கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் ஒவ்வொரு தசையும் ஓய்வாக உணரும்படியாக, ‘ரிலாக்ஸ்’ என்ற ரம்மியமான கட்டளையுடன், உச்சந்தலையில் ஆரம்பித்து முன் மண்டை, முகம், கழுத்து என அடி வரை அவசரமில்லாமல் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும். நமது உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ரிலாக்ஸ் ஆவதை கண்களுக்குள் காட்சியாகவும் உருவகம் செய்யலாம்.

* பயிற்சியின் போது வெளியிலிருந்து எண்ண அலைகள் தாக்காமல் இருக்க, நம்மைச் சுற்றி ஒரு வெள்ளை ஒளி சூழ்ந்து பாதுகாப்பதாக கற்பனை செய்து கொள்ளவும்.

* உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ஓய்வாக உணர்ந்து, ஒரு பாதுகாப்பு கவசத்தையும் உருவாக்கிய பிறகு, பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே மேலிருந்து கீழ் நோக்கி, மாடிப்படி வழியாகவோ அல்லது எலிவேட்டர் மூலமாகவோ இறங்குவதாக கற்பனை செய்யவும். ஒவ்வொரு எண்ணை எண்ணும்போதும் இன்னம் ஆழமாக, இன்னும் ஆழமாக என்று கூறிக்கொண்டே இறங்கவும். (கவனம் சிறிது பிசகுவது போல உணர்ந்தால், பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக்கொண்டே இறங்குவதை இரண்டு முறை செய்யலாம்.)

* இப்பொழுது நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மிக அழகான, மிக இனிமையான ஒரு இடத்திற்கு வந்துவிட்டதை உணருங்கள். அந்த இடம் உங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்த இடமாகவோ அல்லது உங்கள் விடுமுறை நாட்களில் செல்லும் இடமாகவோ அல்லது ஒரு கற்பனை இடமாகவோ கூட இருக்கலாம். மெதுவாக உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் பாருங்கள். மிருதுவாக அவற்றை தொட்டுப் பாருங்கள். சுற்றிக் கேட்கும் இனிமையான ஒலி, ஒருவிதமான நறுமணம் ஆகியவற்றை உணருங்கள். இந்த அனுபவம் மனக் கண் முன் தெளிவான உயிரோட்டமுள்ள காட்சியாகட்டும்.

* இப்பொழுது, உங்கள் குறிக்கோளைக் கற்பனை செய்யத் தொடங்கலாம். அந்தக் குறிக்கோள் கற்பனையில் காட்சியாகவோ, செயலாகவோ அல்லது வார்த்தை வடிவாகவோ இருக்கலாம். குறிக்கோள் கற்பனை பலமுறை செய்யவும்.

* பிறகு அந்த குறிக்கோள் முழுமை அடைவதைபல நிலைகளாக்கி, ஒவ்வொரு நிலைக்கும் சென்று, அந்த ஒவ்வொரு நிலை வெற்றி தரும் அனைத்து உணர்வுகளையும், அமைதியாக முழுமையாக அனுபவிக்கவும்.

* இதில் மிக முக்கியமானது, பயிற்சி பலன் கொடுக்க, நாம் உபயோகிக்கும் அனைத்து வார்த்தைகளும் நேர்மறையானவையாக இருக்க வேண்டும்.

* பயிற்சி முடிந்தவுடன், ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக் கொண்டே, மிக உற்சாகமாக, சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறிக்கொண்டே கண்களை மெதுவாகத் திறக்கவும்.

நம்மில் பலருக்கு அலாரம் அடிக்கும் முன்னே அல்லது அடித்து முடிக்கும் முன் எழும் பழக்கம் இருக்கக்கூடும். அதேபோல் பயிற்சி ஆரம்பிக்கும் போது நம் மனத்திற்குள் குறிப்பிட்ட நிமிடப் பயிற்சி என்று சொல்லி விட்டால் போதும்.


பயிற்சியில் பதிவு செய்ய சில எடுத்துக்காட்டுகள்:
* நான் எப்பொழுதும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் இருப்பேன்

* இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது-

* என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி சரியான முறையில் வேலை செய்து என்னை ஆரோக்கியமாக வைக்கும்.

* நான் என்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்வேன்.

* எனக்கு உடற் பயிற்சி செய்வது மிகவும் பிடிக்கும்.

* நான் என் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவேன்.

பதிவு செய்யும் தகவல்களை விருப்பம்போல் அமைத்துக் கொள்ளலாம். அதேபோல், ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு விஷயம் என ஆரம்பித்து, பின் நாட்களைக் குறைத்தோ அல்லது கூட்டியோ கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சி தனியான அமைதியான இடத்தில் செய்ய ஆரம்பித்து, பின் இதை நாம் பயணம் செய்யும்போது கிடைக்கும் நேரத்திலோ, வேலையின் இடையில் கிடைக்கும் சில நிமிடங்களிலோ கூட செய்யலாம். சில நிமிடங்கள் கண்ணை மூடிச் செய்யும் பயிற்சி பொதுவாக மற்றவர்கள் பார்வையிலும் கவனிப்புக்குரியதாகாது.

சம தரையில் படுத்துக்கொண்டு, கண்களை மூடி உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் கவனம் செலுத்துதல் மற்றும் அதை அன்பாக நேசிப்பதாக உணர்வது என்பது போன்ற சுயமனோவசிய பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருப்பதால் பல யோகா மையங்களில் இப்பொழுது இது பயிற்றுவிக்கப்படுகிறது-

இந்த எளிய பயிற்சி மூலம் மிகப் பெரிய வெற்றி அடையலாம் முயற்சி செய்யுங்கள்.



பிராணயாமம்.


பிராணயாமம்.

ஆசனங்கள் அனைத்திற்கும் மூலாதாரம் பிராணயாமம்

பிராணாயமம் = பிராணன் + அயாமம் (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்)

மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும்.

குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவன்களுக்கு ஆயுட்காலம் அதிகம்.

முயல் 1 நிமிடத்திற்கு 38 தடவை மூச்சு விடுகிறது. அதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள்தான். ஆமை 1 நிமிடத்திற்கு 5 தடவை மூச்சு விடுகிறது. அதன் ஆயுட்காலம் 155 ஆண்டுகள்.

மனிதன் 1 நிமிடத்திற்கு 18 தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம் இரட்டிப்பாகும். கோபம், தாபம், மன அழுத்தம் அதிக உணர்ச்சிகள் உடைய மனிதன் மிகவும் வேகமாக சுவாசிக்கின்றான். இதனால் அவன் நோய்வாய்ப்படுகிறான். மூச்சுப் பயிற்சியால் நோய் நொடி அகலும். ஆயுள் நீட்டிக்கும். பொதுவாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூன்றில் ஒரு பங்கு நுரையீரலைத் தான் நிரப்புகிறது. மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் முழுதும் நிரம்பினால், பிராணவாயு அதிகம் கிடைத்து மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபக சக்தி மிகும். படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். நுரையீரல் வியாதிகளைத் தடுக்கலாம்.


மூச்சை உள்ளிழுத்தல்பூரகம்4 செகண்டுகள்
மூச்சை தக்கவைத்தல்கும்பகம்16 செகண்டுகள்
மூச்சை வெளியே விடல்ரேசகம்8 செகண்டுகள்


இந்த மூன்று பயிற்சியினுடைய விகிதம் 1 : 4 : 2 இருத்தல் சாலச் சிறந்தது.

இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை.

வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை.

இடது மூக்குத் துவாரத்தின் வழி மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழி வெளிவிடுவது சுழுமுனை.

இடகலை = குளிர்ச்சி ; பிங்கலை = சூடானது. சுழுமுனை பிராணவாயுவை அதிகம் நுரையீரலில் தக்க வைக்கும். காரணம் இடது நாசியிலிருந்து சுவாசப் பையின் தூரம் 16 அங்குலம். வலது நாசியிலிருந்து சுவாசப்பையின் தூரம் 12 அங்குலம். இடது நாசியால் இழுத்து வலது நாசியால் வெளிவிடும் பொழுது 4 அங்குலம் மூச்சு (பிராணவாயு அதிகம் உள்ள மூச்சு) நுரையீரலில் உள் தங்குகிறது. இது இரத்தத்தை சுத்தி செய்யும். பிராண சக்தியை அதிகரிக்கும்.

பிராணாயாமம் அட்டாங்க யோகத்தின் நான்காம் யோகமாகும்.

(1) பஸ்திரிகா பிராணயாமம் ; செய்முறை.

தியானம் போல் இடம், ஆசனம், மற்றைய நியதிகள் இருக்கட்டும்.
பிராணயாமம் செய்யும் பொழுது மூச்சோடு மனம் ஒன்ற வேண்டும்.
மூச்சை வெளிவிடும் பொழுது வயிறு மட்டும் சுருங்க வேண்டும்.
மூடிய கண்கள் மூக்கின் நுனியைப் பார்த்தபடி இருக்கட்டும்.
மூச்சை இயல்பாக விட வேண்டும்.
வலது கைப் பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியால் மூச்சை முடிந்தவரை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளிவிடவும். பின் வலது நாசி வழியாக மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல், வலது நாசியை அடைத்துக் கொண்டு மூச்சை இடது நாசி வழியாக வெளிவிடவும். இப் பயிற்சியை 5-10 தடவைகள் செய்தால் போதுமானது.

(2) கபாலபதி பிராணயாமம் ; செய்முறை.

இரண்டு மூக்குத்துவாரங்களிலும் மூச்சை வேகமாக உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் உடனே அதிவேகமாக வெளிவிடவும். இப் பயிற்சியை 5-10 தடவைகள் செய்யவும்.

(3) உஜ்ஜயி பிராணயாமம்.

இரண்டு மூக்குத் துவாரங்களிலும் ஒரே நேரத்தில் மூச்சை முடிந்தவரை உள்ளுக்கிழுத்து (4 செகண்டுகள்) பின் அப்படியே மூச்சை உள் நிறுத்தி (16 செகண்டுகள்) பின் நிதானமாக மெதுவாக வெளிவிடுதல் வேண்டும் (8 செகண்டுகள்).

ஆசிபா (ABS) பயிற்சி

ஆசனவாய், சிறுநீர்ப்பை, பாலியல் உறுப்புகள் அனைத்தும் ஒரே நரம்பினால் எஸ் – 2 (S 2 Segment) இயக்கப்படுகிறது. ஆசனவாயை சுருக்கி, விரிவடையச் செய்யும் பயிற்சியால் அந்த நரம்பு வலுவடைகிறது. பயிற்சியால் பெண்கள் பாலியல் உறுப்புகள் கட்டுப்பாடும், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் (Uterine Prolapse) தடுப்பும் பெறுகிறார்கள். சிறுநீரை அடக்குதல் சுலபமாக சாத்தியமாகிறது. ஆண்களுக்கு நீர்த்தாரை கட்டியால் (Prostate) ஏற்படும் முதுமைக்கால நீர்க்கசிவு, கட்டுப்பாடின்மை குறைகிறது. விந்துக் கசிவும் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆசிபா செய்முறை :

கால்களை கொஞ்சம் அகல விரித்து, நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ ஆசனவாயை மெதுவாகச் சுருக்கி, பின் விரித்து 10 தடவை பயிற்சி செய்யவும். இப் பயிற்சி செய்யும் பொழுது, மனம் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். பயிற்சி கஷ்டப்படாமல் இயல்பாக செய்யப்பட வேண்டும். பயிற்சி முடிவில் உஜ்ஜயி பிராணயாமம் செய்யவும். கைகளைக் கும்பிடுவது போல் மேல் தூக்கி மூச்சை இரண்டு நாசிகளாலும் நாலு செகண்டுகள் உள்ளிழுத்து பதினாறு செகண்டுகள் நிறுத்தி பின் எட்டு செகண்டுகள் மெதுவாக வெளிவிடவும்.

ஆசிபா பயிற்சியை ஐந்து முறையும் மாலையில் ஐந்து முறையும் செய்யவும்.
ஆ : ஆசனவாய். சி : சிறு நீர்ப்பை: ப : பாலியல் உறுப்புகள்

A : Anus, B : Bladder, S : Sexual organs.

எல்லாப் பயிற்சிகளுக்கும் பொது நியதிகள்:

1. பயிற்சிக்காலம் முழுதும் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
2. காற்றோட்டமான இடத்தில் பயிற்சி செய்தல் நலம்.
3. பயிற்சியில் மனம் லயிக்க வேண்டும். (ஒருமை உணர்வு)
4. முக மலர்ச்சியுடன் பற்றுவைத்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
5. மூச்சை இயல்பாக விட வேண்டும்.
6. இரண்டு பயிற்சிகளுக்கு நடுவில் குறைந்தது 5 நிமிட இடைவெளி தர வேண்டும்.
7. பயிற்சி தொடங்குமுன் தசைகளை தளர்த்தி இயல்பாக மூச்சுவிட வேண்டும்.
8. மூச்சுப் பயிற்சியின்போது இருதய, நுரையீரல் நோயாளிகள் அதிக நேரம் மூச்சை இழுத்து, உள்நிறுத்தி ‘தம்’ கட்டுவது தவறு. ஆபத்தாகும்.
9. பயிற்சி முடிந்ததும் உடனே எழுந்து வேறு வேலை செய்வது நல்லதல்ல. குறைந்தது பத்து நிமிடம் ஓய்வு தேவை. விரும்பினால் சாந்தி யோகம் செய்யலாம்.
10.பயிற்சிகள் முடிந்த பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
11.இளைஞர்கள் விளையாடுவதற்கு முன் இப் பயிற்சிகளை ஒரு ஆரம்ப
தயார் நிலை (Warm up) பயிற்சியாக செய்வது சிறந்த பலனைத் தரும். வாழ்க வளமுடன்...

Friday, April 23, 2010

ஆல்ஃபா


ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை “ரிலாக்ஸ்” (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம். சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

Thursday, April 8, 2010

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள்


ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை...

1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும்.

2. Extra Sensory Perception (ESP) எனப்படும் நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது.

3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனத்துக்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது.

4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி.

5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது.

6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி.

7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி.

8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது.

9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி.

ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.


அனைவருக்கும் நன்றி...

எனக்கு மிகவும் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி... இடையில் தியான பயிற்சிகளை நடத்தியதால் எழுத்துப் பணியில் சிறிது இடைவெளி இனி தொடர்ந்து உங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...